Friday, March 25, 2011

பாவம்? புண்ணியம்?

பனிகொண்ட காற்றலைகள் மேனிதொடும் காலையில்நான்
தனிநின்றுக் கொண்டேதோ சிந்தித்திருந் தேனங்கே
கனிகொள்ளப் பூவிரித்து மகரந்த மென்கின்ற
மணிகொள்ளக் காத்திருந்த செடியொன்று கண்டேன் - அது
மெய்யழகு தனைக்கூட்ட மொய்குழலில் மலர்ச்சூடிப்
பொய்யழகே காட்டுகின்றப் பாவையரைப் பழிப்பதுபோல்
தன்மேனி தனில்பூத்த தன்பூவை யேசூடி
தன்னழகு காட்டுகின்றப் பேரழகாய் நின்றதந்த
மண்தொட்ட மலர்ச்செடியின் பனிதொட்ட மலரழகை
பண்தொட்டுப் பாடிடவே சிந்தித்த போதங்கே
வளைவுகளால் அழகுசொல்லும் இடையாட மணிகொண்டு
விளையாட அழைக்கின்ற கலசங்கள் அசைந்தாட
பேரழகின் பொருள்சொல்லும் பாவையர்கள் எல்லோர்க்கும்
பேரரசி போலொருத்தி வந்துநின்றாள் பூத்திருந்த
பூவதனை நொடிப்பொழுதில் கொய்தெடுத்தாள் நெஞ்சத்தில்
மேவிவந்த சிந்தனையில் நெருப்பள்ளி வைத்ததுபோல்
பாவியவள் செய்தசெயல் எனையாக்கி விட்டதம்மா
அன்பென்னும் அறத்திற்கு பட்டாங்கின் விளக்கங்கள்
என்புதோலு திரங்கொண்ட வர்களுக்கே பொருந்துவதோ?
சதைநரம்பில் உண்டாகும் உணர்வுகளும் வலிகளும்தான்
விதைகொண்டு தோன்றுமொரு மரல்ச்செடிக்குண் டாகாதோ?
கரமறுத்தல் பாவமென்னில் மலர்கொய்த லும்பாவம்
சிரமறுத்தல் பாவமென்னில் மரமறுத்த லும்பாவம்
வன்முறையும் சுயநலமும் கருக்கொண்ட மனிதவினம்
நன்நெறியென் றுரைப்பதெலாம் பொய்கொண்ட நெறிகள்தான்
அறமென்றும் பாவமென்றும் இவர்சொல்லும் கதைகளுமே
பொய்கள்தான் பொய்கள்தான் அத்தனையும் பொய்கள்தான்

-இராஜகுரு

Tuesday, July 7, 2009

கண்ணீர் கலந்த கவிதை

இதன் முந்தைய கவிதையைப் படித்த பிறகே இந்தக் கவிதையைப் படிக்கவும்.

அன்று சுனாமி வந்த பொழுது கடலுக்கு ஆதரவாகப் பேசியவன், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பாடாமல் இல்லை. உண்மையில் இதுதான் முதலில் எழுதிய கவிதை. அதன் பிறகு தான் கடலுக்காக எழுதினேன்.

கரைமீது விளையாடி கடலோடு
        கவிபாடி களித்திருந்தோம் இன்றந்தக்
கரைதன்னை மறைத்தெங்கும் நீர்நிறைந்து
        நீர்மறைத்து மிதப்பதெங்கும் பிணங்களாக
நிறைகின்ற நீரொடுகண் ணீர்நிறைந்தே
        அழுகுரலின் ஒலியுமிங்கு நிறைகிறது
குறையின்றிப் பிழைத்துவிட்டோம் என்றெண்ணி
        ஒருகூட்டம் நிம்மதியில் சிரிக்கிறது

சிறுக சிறுக சேர்த்து வைத்த
        செல்வ மெல்லாம்
பெருகி வந்த வெள்ளத் தோடு
        போன தாலே
இருந்த இடத்தை விட்டுப் போகவும்
        வழியவர்க் கில்லை
இருக்கும் இடத்தில் வாழ இனியவர்க்
        குணவும் இல்லை

பெற்ற பிள்ளை கடலில் சாகும்
        கொடுமை தன்னைக் கண்டார்
சுற்றம் என்று சொல்லிக் கொள்ள
        இனியவர்க் கெவரும் உண்டோ?
நிற்கவும் இடமிலை பிணத்தின் நாற்றம்
        எங்கும் வீச; அதிலும்
பெற்ற தாயின் உடலைத் தேடும்
        மரண வேதனை கொண்டார்

நினைத்தாலும் உள்ளம் கொதிக்கிறது - கடல்
நீரெங்கும் பிணங்கள் மிதக்கிறது
பிணக்காடாய் ஊரே ஆனது - உடலை
வாங்கவும் ஆளின்றிப் போனது

எவரும் எதிர்பாரா தருணம் - நில
நடுக்கத்தால் எத்தனை மரணம் - மகிழ்ச்சி
மீண்டும் என்று மலரும்? - அந்த
நாளும் விரைவில் வரணும்


-இராஜகுரு
(02 / ஜனவரி / 2005)

(குறிப்பு: "தருணம்" என்பது தமிழ்ச் சொல் அல்ல. 'அதை மாற்றினால் அங்கு அமைந்த ஓசை மாறக்கூடும். அதனால் அதை மாற்ற வேண்டாம்' என்ற நண்பர் ஒருவரின் கருத்துக்காக அதை மாற்றவில்லை)

Tuesday, June 16, 2009

அவசரமாய் எழுதிய கவிஞர்களுக்கு!

26 டிசம்பர் 2004. சுனாமி தமிழகத்தையும் தாக்கிய நாள். அதற்கு அடுத்த சில நாட்களில் வெளிவந்த பல பத்திரிகை இதழ்களிலும் சுனாமி குறித்து புதுக்கவிதைகள். முக்கிய பக்கங்களில் வெளிவந்த கவிதைகளை எழுதியவர்கள் எல்லோரும் அன்றும் இன்றும் திரைப்பட பாடலாசிரியர்களாகவும் தமிழக அரசியலில் பெரும் புள்ளிகளாகவும் கொடிகட்டிப் பறப்பவர்கள்.

அத்தனை பெரும் தத்தம் கவிதைகளில், சுனாமி ஏற்பட்டதற்கு கடலே காரணமென்று கடலைக் குற்றவாளியாக்கி எண்ணற்றப் பழிகளைக் கடல்மேல் சுமத்தியிருந்தனர்.

பள்ளிக்கூடம் முடிந்தவுடன் எத்தனையோ நாட்கள் நானும் என் நண்பனும் விளையாடச் சென்ற இடம் கடற்கரை. எங்களை தினம்தினம் வரச்சொல்லி அழைத்தது கடல்.

அத்தகைய கடலைச் சாடி எத்தனைக் கவிதைகள்!

"நெஞ்சு பொறுக்க விலையே - அந்த
மதிகெட்ட கவிதைகளைப் படித்ததிலே"

அதன்பின், கடல் குற்றமற்றது என்பதை காட்டுவதற்காகவே நானும் எழுதினேன் ஒரு கவிதை. அவர்கள் எழுதிய அதே புதுக்கவிதை நடையில்.

சமீபத்தில், நண்பர் அகரம் அமுதா அவர்களின் வலைப்பதிவிலும் அதேபோல் சுனாமி குறித்து கடலைச் சாடிய கவிதை ஒன்று படித்தேன். என் எண்ணத்தை அவரிடம் தெரிவித்தேன். "உன் கவிதையை வெளியிடு. தவறில்லை" என்றார். அவர் அனுமதியுடன், இதோ அந்தக் கவிதை...

சுனாமி குறித்து கவிதை எழுதிய
கவிஞர்களுக்கு ஒரு கடிதம்

எதுகை மோனை கைவசம் இருப்பதால்
எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாமா?

உப்பிட்டவரை மறப்பதே பாவம் - நீங்களோ
உப்பளித்த கடலை மிதித்தே விட்டீர்களே

கடலுக்கா உயிர்களைப் பறிக்கும் ஆசை?
ஐயோ! இன்று நீங்களல்லவா
கடலைக் கொலை செய்யத் துடிக்கிறீர்கள்

அழகிய நிறமல்லவா நீலம் - அதை
நஞ்சென்று சொல்வதா உங்கள் எண்ணம்?

கடல் என்ற சொல் கூட 'அழகு' தானே - அதை
எப்படி உங்களால் 'அழுக்'காக்க முடிந்தது

ஆழிப் பேரலையால்
ஆயிரம் உயிர்கள் சாகும் என்று
கடலுக்கு எப்படித் தெரியும்

சுனாமி வந்தது உண்மைதான் - அனால்
சாகடிப்பது அதன் நோக்கமில்லையே

கடல் என்ன தானாகவா கொந்தளித்தது?
நில நடுக்கத்தால் தானே கொந்தளித்தது

இது காலத்தின் செயல்
என்பதை உங்களால் மறுக்க முடியுமா?
காலத்தை உங்களால் ஏச முடியுமா?

இளமைக்குப் பின் முதுமை வருவதால்
முதுமையை ஏசுபவர் உண்டோ?

காலத்தின் மாற்றத்திற்கு
கடலும் கட்டுப்பட்டதுதான்

காலத்தின் மாற்றத்தால் கொந்தளித்த கடலை
குற்றம் சொல்வது கவிஞனுக்கு அழகில்லை

காலத்தையும் - அதன்
மாற்றத்தையும் - கற்பனையால்
ஏற்றிச் சொல்லி - அதைப்
போற்றுபவன் அல்லவா கவிஞன்

கடல் இல்லையேல் மேகம் திரளுமா?
மேகம் இல்லையேல் மழை பொழியுமா?
மழை இல்லையேல் மண் விளையுமா?
விளைச்சல் இல்லையேல் உணவு கிடைக்குமா?
உணவு இல்லையேல் உயிர்கள் பிழைக்குமா?

கடலைச் சாடும் கவிகளே
கடலின்றி உங்களால் இருக்க முடியுமா?

வலை வீசிக் கடலின் மீன்களைப் பிடிக்கும்
மனிதனைப் போற்றும் நீங்கள்
ஒரே ஒரு நாள்
அலை வீசி மனிதனைப் பிடித்ததால்
கடலை ஏசுவது சரியோ?

கடலைச் சாடியது போதாதென்று - சிலர்
நிலத்தின் மீதும் பழிசுமத்தி விட்டீர்கள்
நிலம் ஏன் நடுங்கியது
என்பதை சிந்தித்தீர்களா?

மரங்களைச் சாய்த்தோம் - மண்ணின்
வளங்களை மாய்த்தோம்
நிலத்தைக் குடைந்தோம் -அதன்
நீரை உறிஞ்சினோம்
முடிந்தவரை தோண்டினோம் - மண்
கொண்டதை எல்லாம் பிடுங்கினோம்
நிலம் கொடுத்ததைக் காட்டிலும்
நாம் எடுத்ததே அதிகம்

நெஞ்சு குளிர எடுத்துக் கொண்டு - வெறும்
நஞ்சைத்தானே மண்ணிற் களித்தோம்

இன்னும் என்ன செய்வோமோ என்ற
பயத்தால்தானே நிலம் நடுங்கியது
அதனால்தானே கடல் பொங்கியது

நிலம் நடுங்கியதற்கும்
கடல் பொங்கியதற்கும்
காரணம் காலம்

காலம் செய்த குற்றத்திற்கு
கடலைச் சாடுவது சரியோ கவிகளே?

எனக்கும் எழுதத் தெரியும் என்பதற்காகவோ
உங்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவோ
நான் எழுதவில்லை

உங்களைப் பிறர் ஏற்க வேண்டும்
என்பதற்காகவே எழுதுகிறேன்

உயிர் எவர்க்கும் சொந்தமல்ல
அதைக் கொடுப்பதும் எடுப்பதும்
காலத்தின் கையில்

நன்றி.

-இராஜகுரு
(04 / ஜனவரி / 2005)

Monday, June 15, 2009

அன்பு

பெற்றெடுத்த பிள்ளை பிறப்பளித்த அன்னையென
சுற்றிநிற்கும் சுற்றத்தார் யாவர்க்கும் - மற்றிவ்
வுலகினில் வாழும் உயிர்களனைத் திற்கும்
நலனே நினைப்பதாம் அன்பு

பொன்னாலே ஆலயமொன் றமைத்தாலும்
        பூவாலே பூஜைகள் செய்தாலும்
எந்நாளும் இறையோனை நினைப்பதுவாய்
        பன்னாட்கள் விரதம்மேற் கொண்டாலும்
பெண்மீதும் மண்மீதும் பொன்மீதும்
        கொண்டஆசை அத்தனையும் கொன்றாலும்
அன்புள்ளம் இல்லாத பேரானால்
        இறையோனைச் சரண்புகுதல் இயலாதே

மண்ணோடு புரளும்புழு வானாலும்
        விடங்கொண்டு தீண்டும்பாம் பானாலும்
எண்ணிடையே எல்லாம்ஓர் உயிரென்னும்
        உண்மையினை உள்நிறுத்தி யார்மாட்டும்
அன்புடையார் எல்லோரும் மேலோர்இங்(கு)
        அஃதில்லா தார்யாருங் கீழோர்மெய்
அன்புடையார்க் கேஇறைவன் அருளுண்டாம்
        அன்பில்லா தார்க்கென்றும் வேதனையே

சொல்லாலே விளங்காதே அன்பிங்கே
        சொற்களினால் விளக்குதலும் இயலாதே
பல்லோரும் வணங்குகின்ற இறையோனைச்
        சில்லோரே தாரணியில் உணர்வதுபோல்
நல்லோராய் வாழ்வாரே யானாலும்
        சில்லோரே அன்புதனை உனர்ந்திடுவார்
எல்லாமாய் விளங்குகின்ற இறையோனை
        உணர்விக்கும் நெறியென்றால் அன்பொன்றே

இன்பத்தின் பொருளறியார் அன்பிலாதார்
        எஞ்ஞான்றும் பிறர்மகிழ அன்பளித்தே
இன்புறுவார் நெஞ்சத்தால் அன்புடையார்
        தாரணியின் அன்பொன்றே சிவமென்றார்
முன்னோரும் சொன்னதுவே இன்னார்க்கும்
        அன்புடையா ரானவர்கட்(கு) உண்டெனினும்
துன்பெல்லாம் துரும்பாகும் அன்புடையார்
        மன்னுலகும் கண்டவராம் மண்ணகத்தே

- இராஜகுரு

Monday, January 26, 2009

புகழ்ச்சி

"பெண்ணுக்கும் மண்ணுக்கும் பொன்னுக்கும் மயங்காதவர்கள் கூட புகழுக்கு மயங்குவதுண்டு. புகழ்ச்சியும் பாராட்டுமே ஒருவன் தன் செயல்களில் மேலும் வெற்றி பெறுவதற்கான ஊக்குவிப்பாக அமையக்கூடும். ஆனால் மிகுந்த புகழ்ச்சி ஒருவனின் கர்வத்தை அதிகப்படுத்தி அவனது வீழ்ச்சிக்கே காரணமாகவும் அமையக்கூடும்.

இந்த சூட்சுமம் தெரிந்த சிலர் தங்கள் காரியத்தை மற்றவர்களை புகழ்ந்தே சாதித்துக் கொள்கிறார்கள். வேறு சிலர் மிகுந்த புகழ்ச்சிக்கு மயங்காது நிலையாக இருக்கிறார்கள்.

அதுபோன் புகழ்ச்சிக்கு நானும் ஒருமுறை ஆளான போதுதான் இந்தக் கவிதையை எழுதினேன்".

கொண்டநற் றிறனைக் காட்டிய பின்னே
கண்டவர் அனைவரும் புகழ்கிறார் இங்கே
வேண்டாம் இந்தப் பெரும்புகழ் என்னை
வீணென் றாக்கும் ஆணவம் பற்றும்
சான்றோர் தம்மைக் கண்டால் என்னுள்
தோன்றும் அடக்கம் தொலைந்தே போகும்
சிறிதாய் இங்கோர் வீழ்ச்சிவந் தாலும்
பெரிதாய்த் தோன்றும் காண்பவர்க் கிங்கே
இகத்தை ஆளுந் திறமிருந் தாலும்
புகழ்வ திங்கே யிருக்கட்டும் அளவாய்

-இராஜகுரு

Thursday, January 1, 2009

புத்தாண்டுப் பொன்வானம்

வாசகர்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துகள்.

"நேற்றைய இரவு (31.12.2008). புத்தாண்டை வரவேற்க அத்தனை விழிகளும் ஆவலாய் விழித்துக் கொண்டிருந்த இரவு.
மற்ற இரவுகளுடன் சற்றே முரண்படும் இரவு.
புத்தாண்டு தொடங்கி அரை நிமிடம் வரை மட்டும் அந்த இரவு வானில் வண்ண மணிச்சிதறல்களாய் எத்தனை வான வேடிக்கைகள்.

வண்ணங்கள் சிதறும் வன்ன வானம்.
அந்த வன்ன வானுக்கு ஒரு சின்னக் கவிதை".

ஒளித்துளிகள் சிதறுவதால் வானிலிந்த வண்ணமென்றார் - அதில்
பனித்துளியின் சிதறல்களோ மின்னுமிந்த விண்மீன்கள்

ஒளித்துளிகள் தான்சிந்தி மின்னும்விண் மீன்களொடே - வண்ண
மணிச்சிதறல் போலழகு பொழியும்வான் வேடிக்கை

தனித்தனியாய் சிதறுகின்ற எழிற்றுளிகள் சேர்ந்ததனால் - இங்கே
தனிச்சிதறா அழகெடுத்தப் புத்தாண்டுப் பொன்வானம்.

- இராஜகுரு

Sunday, October 26, 2008

சிறகுகள் விரிக்கும் ஆசை

"பறவைகள் பறப்பதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அது ஒரு பெரும் அதிசயமாகவே தோன்றும். ஒரு பறவை தன் சிறகுகளை அசைத்தும் வானில் ஏறி எந்தப் பிடிப்பும் இல்லாமல் காற்றில் செல்வதும், பின் அசைவுகளின்றி மிதந்து செல்வதும், பறந்து செல்வதும் என் மனதில் புதுப்புது உணர்வுகளை உண்டாக்கும். 

பறவைகளும் பறவைகள் பறக்கும் அழகும் மிகவும் பிடித்துவிட்டதால் எனக்கும் பறக்க வேண்டும் என்றொரு ஆசை. 
அந்த ஆசையின் பிரதிபலிப்பே இந்தக் கவிதை..." 

செந்நிலவு தோன்றுமொரு செவ்வந்தி வேளையிலே 
வண்ணமுறு பூப்பூக்கும் வாசமிகு சோலைதனில் 
வண்டாடும் பூக்களைநான் ரசித்திருந்தேன்; அந்நேரம் 
கொண்டாடிச் சிறகடித்து வந்ததொரு சிறுபறவை 

வண்ணச் சிறகடித்து வெள்ளிவான வீதியில் 
சின்னஞ் சிறுபறவை சின்னதொரு வட்டமிட்டு 
என்னை நெருங்கிவந்தென் அருகில் அமர்ந்ததுகாண் 
மின்னும் விழிகளினால் என்னைப் பார்த்ததுகாண் 

செம்மண்ணில் தனைபுதைத்து சீர்கூட்டுஞ் சோலைவிட்டு 
செவ்வானில் தனைபுதைக்கச் சென்றதந்த சிறுபறவை 
அவ்வானில் அதுபறந்த அழகுதனைக் கண்டதனால் 
என்வானம் போல்நெஞ்சில் எழுந்ததொரு ஆசையம்மா 

நான்கண்ட சிறுபறவை மீண்டும்வர வேண்டும் 
பறவையோடு நீங்காத நட்புகொள்ள வேண்டும் 
பொன்மாயச் சிறகிரண்டு எனக்கென்று தந்து 
பறப்பதற்கும் அப்பறவை பயிற்சிதர வேண்டும் 

கிளைவிட்ட நெடுமரங்கள் தனில்சிக்கிக் கொண்டும் 
சற்றுயரப் பறந்தேஎன் தோல்தேய வீழ்ந்தும் 
பறவைதரும் பயிற்சியிலே சிலநாட்கள் கழியும் 
பின்தொடங்கும் பொன்வானில் தனியாய்என் பயணம் 

வன்னநிலா வீசிவரும் வான்சிவக்கும் நேரம் 
என்மாயச் சிறகுகளை நான்விரிக்க வேண்டும் 
செல்லாத இடமெல்லாம் சென்றுவர வேண்டும் 
சொல்லாத உணர்வுகளும் என்னுள்ளே தோன்றும் 

அலைகடலின் மேல்பறந்து விளையாடிக் கொண்டும் 
கலைகின்ற மேகத்தின் உட்புகுந்து சென்றும் 
மலையழகும் நதியழகும் நான்காண வேண்டும் 
கலையழகு தோன்றவதைக் கவிபாட வேண்டும் 

வேனிற் கால வெயிலில் ஒருநாள் 
மேகம் திரண்டு பொழிய வேண்டும் - அந்த 
மழையில் என்றன் சிறகுகள் நனைய 
பாடிக் கொண்டு பறக்க வேண்டும் 

ஆசையம்மா ஆசை - இது 
சிறகுகள் விரிக்கும் ஆசை 
காற்றைக் கிழித்துக் கொண்டு - வானில் 
பறந்துச் செல்லும் ஆசை 

ஆயிரம் ஆசைகள் அவரவர்க்(கு) உண்டு - என் 
பறக்கும் ஆசை அதிலே ஒன்று 
சிறகுகள் இரண்டு விரித்துக் கொண்டு - நான் 
வானம் தொட்டுப் பறப்ப தென்று? 

சின்னப் பறவைகள் பாடும் போதும் 
வண்ணப் பறவைகள் பறக்கும் போதும் 
எண்ணச் சிறகுகள் ஆயிரம் விரித்தே 
என்னுள் புதுப்புது உணர்வுகள் தோன்றும் 

வண்ணப் பறவையாய் சிறகுகள் விரித்து 
வானில் பறப்ப தியலா தெனினும் 
எண்ணச் சிறகுகள் விரிப்பேன்; என்றன் 
கற்பனை வானில் பறந்து திரிவேன்

-இராஜகுரு