Sunday, October 26, 2008

சிறகுகள் விரிக்கும் ஆசை

"பறவைகள் பறப்பதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அது ஒரு பெரும் அதிசயமாகவே தோன்றும். ஒரு பறவை தன் சிறகுகளை அசைத்தும் வானில் ஏறி எந்தப் பிடிப்பும் இல்லாமல் காற்றில் செல்வதும், பின் அசைவுகளின்றி மிதந்து செல்வதும், பறந்து செல்வதும் என் மனதில் புதுப்புது உணர்வுகளை உண்டாக்கும். 

பறவைகளும் பறவைகள் பறக்கும் அழகும் மிகவும் பிடித்துவிட்டதால் எனக்கும் பறக்க வேண்டும் என்றொரு ஆசை. 
அந்த ஆசையின் பிரதிபலிப்பே இந்தக் கவிதை..." 

செந்நிலவு தோன்றுமொரு செவ்வந்தி வேளையிலே 
வண்ணமுறு பூப்பூக்கும் வாசமிகு சோலைதனில் 
வண்டாடும் பூக்களைநான் ரசித்திருந்தேன்; அந்நேரம் 
கொண்டாடிச் சிறகடித்து வந்ததொரு சிறுபறவை 

வண்ணச் சிறகடித்து வெள்ளிவான வீதியில் 
சின்னஞ் சிறுபறவை சின்னதொரு வட்டமிட்டு 
என்னை நெருங்கிவந்தென் அருகில் அமர்ந்ததுகாண் 
மின்னும் விழிகளினால் என்னைப் பார்த்ததுகாண் 

செம்மண்ணில் தனைபுதைத்து சீர்கூட்டுஞ் சோலைவிட்டு 
செவ்வானில் தனைபுதைக்கச் சென்றதந்த சிறுபறவை 
அவ்வானில் அதுபறந்த அழகுதனைக் கண்டதனால் 
என்வானம் போல்நெஞ்சில் எழுந்ததொரு ஆசையம்மா 

நான்கண்ட சிறுபறவை மீண்டும்வர வேண்டும் 
பறவையோடு நீங்காத நட்புகொள்ள வேண்டும் 
பொன்மாயச் சிறகிரண்டு எனக்கென்று தந்து 
பறப்பதற்கும் அப்பறவை பயிற்சிதர வேண்டும் 

கிளைவிட்ட நெடுமரங்கள் தனில்சிக்கிக் கொண்டும் 
சற்றுயரப் பறந்தேஎன் தோல்தேய வீழ்ந்தும் 
பறவைதரும் பயிற்சியிலே சிலநாட்கள் கழியும் 
பின்தொடங்கும் பொன்வானில் தனியாய்என் பயணம் 

வன்னநிலா வீசிவரும் வான்சிவக்கும் நேரம் 
என்மாயச் சிறகுகளை நான்விரிக்க வேண்டும் 
செல்லாத இடமெல்லாம் சென்றுவர வேண்டும் 
சொல்லாத உணர்வுகளும் என்னுள்ளே தோன்றும் 

அலைகடலின் மேல்பறந்து விளையாடிக் கொண்டும் 
கலைகின்ற மேகத்தின் உட்புகுந்து சென்றும் 
மலையழகும் நதியழகும் நான்காண வேண்டும் 
கலையழகு தோன்றவதைக் கவிபாட வேண்டும் 

வேனிற் கால வெயிலில் ஒருநாள் 
மேகம் திரண்டு பொழிய வேண்டும் - அந்த 
மழையில் என்றன் சிறகுகள் நனைய 
பாடிக் கொண்டு பறக்க வேண்டும் 

ஆசையம்மா ஆசை - இது 
சிறகுகள் விரிக்கும் ஆசை 
காற்றைக் கிழித்துக் கொண்டு - வானில் 
பறந்துச் செல்லும் ஆசை 

ஆயிரம் ஆசைகள் அவரவர்க்(கு) உண்டு - என் 
பறக்கும் ஆசை அதிலே ஒன்று 
சிறகுகள் இரண்டு விரித்துக் கொண்டு - நான் 
வானம் தொட்டுப் பறப்ப தென்று? 

சின்னப் பறவைகள் பாடும் போதும் 
வண்ணப் பறவைகள் பறக்கும் போதும் 
எண்ணச் சிறகுகள் ஆயிரம் விரித்தே 
என்னுள் புதுப்புது உணர்வுகள் தோன்றும் 

வண்ணப் பறவையாய் சிறகுகள் விரித்து 
வானில் பறப்ப தியலா தெனினும் 
எண்ணச் சிறகுகள் விரிப்பேன்; என்றன் 
கற்பனை வானில் பறந்து திரிவேன்

-இராஜகுரு

8 comments:

Anonymous said...

/// அருமையாக எழுதியுள்ளீர்கள்///

“பின்தொடங்கும் பொன்வானில் தனியாய்என் பயணம்”

நான் மிகவும் இரசித்த வரிகள்....

வாழ்க!

Anonymous said...

//உள்ளத்தையும் உணர்வுகளையும் அறுதெறிந்தாலொழிய ஊற்றெடுக்கும் கவிதைகளுக்கு அணை கட்ட முடியாது//

கலக்கல்
அருமை
நன்று!!!

Raajaguru said...

மறுமொழியிட்டு என் கவிதைக்குச் சுடர் தந்த சுடர்மணிக்கு மிக்க நன்றி.

அகரம் அமுதா said...

அருமை இராஜகுரு! கவிதை மிக அருமை. வாழ்த்துகள்.

////வன்னநிலா வீசிவரும் வான்சிவக்கும் நேரம் என்மாயச் சிறகுகளை நான்விரிக்க வேண்டும் செல்லாத இடமெல்லாம் சென்றுவர வேண்டும் சொல்லாத உணர்வுகளும் என்னுள்ளே தோன்றும்
அலைகடலின் மேல்பறந்து விளையாடிக் கொண்டும் கலைகின்ற மேகத்தின் உட்புகுந்து சென்றும் மலையழகும் நதியழகும் நான்காண வேண்டும் கலையழகு தோன்றவதைக் கவிபாட வேண்டும் /////

போன்ற வரிகள் அருமை அருமை. வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

Raajaguru said...

திரு. கோவி.கண்ணன் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.

Raajaguru said...

எனை வாழ்தியுயர்த்திய அண்ணன் அகரம்.அமுதாவிற்கு மிக்க நன்றிகள்.

அண்ணாமலை..!! said...

எதைப்படிக்க எதைவிடுக்க
என்றறியா தளவிற்கு..!!
எல்லாமும் அருமை..!!
வாழ்க நீரும்..தமிழும்..!!