Friday, March 25, 2011

பாவம்? புண்ணியம்?

பனிகொண்ட காற்றலைகள் மேனிதொடும் காலையில்நான்
தனிநின்றுக் கொண்டேதோ சிந்தித்திருந் தேனங்கே
கனிகொள்ளப் பூவிரித்து மகரந்த மென்கின்ற
மணிகொள்ளக் காத்திருந்த செடியொன்று கண்டேன் - அது
மெய்யழகு தனைக்கூட்ட மொய்குழலில் மலர்ச்சூடிப்
பொய்யழகே காட்டுகின்றப் பாவையரைப் பழிப்பதுபோல்
தன்மேனி தனில்பூத்த தன்பூவை யேசூடி
தன்னழகு காட்டுகின்றப் பேரழகாய் நின்றதந்த
மண்தொட்ட மலர்ச்செடியின் பனிதொட்ட மலரழகை
பண்தொட்டுப் பாடிடவே சிந்தித்த போதங்கே
வளைவுகளால் அழகுசொல்லும் இடையாட மணிகொண்டு
விளையாட அழைக்கின்ற கலசங்கள் அசைந்தாட
பேரழகின் பொருள்சொல்லும் பாவையர்கள் எல்லோர்க்கும்
பேரரசி போலொருத்தி வந்துநின்றாள் பூத்திருந்த
பூவதனை நொடிப்பொழுதில் கொய்தெடுத்தாள் நெஞ்சத்தில்
மேவிவந்த சிந்தனையில் நெருப்பள்ளி வைத்ததுபோல்
பாவியவள் செய்தசெயல் எனையாக்கி விட்டதம்மா
அன்பென்னும் அறத்திற்கு பட்டாங்கின் விளக்கங்கள்
என்புதோலு திரங்கொண்ட வர்களுக்கே பொருந்துவதோ?
சதைநரம்பில் உண்டாகும் உணர்வுகளும் வலிகளும்தான்
விதைகொண்டு தோன்றுமொரு மரல்ச்செடிக்குண் டாகாதோ?
கரமறுத்தல் பாவமென்னில் மலர்கொய்த லும்பாவம்
சிரமறுத்தல் பாவமென்னில் மரமறுத்த லும்பாவம்
வன்முறையும் சுயநலமும் கருக்கொண்ட மனிதவினம்
நன்நெறியென் றுரைப்பதெலாம் பொய்கொண்ட நெறிகள்தான்
அறமென்றும் பாவமென்றும் இவர்சொல்லும் கதைகளுமே
பொய்கள்தான் பொய்கள்தான் அத்தனையும் பொய்கள்தான்

-இராஜகுரு

1 comment:

சுப்பிரமணி சேகர் said...

அருமை நண்பரே! அருமையிலும் அருமை! கவினழகைக் கண்டு கவிசொல்ல வந்தவன் புவியில்மலி பாவமும் புண்ணியமும் பேசினையே! வருணித்தவை மிகவும் அழகு! சந்தம் மனநிறைவு!