வான்வெளியில் பூத்திருக்கும் வாசமலர்ச் சோலையதில்
நான்பறந்து திரிவதுபோல் நாளும்ஒரு கனவுவர
தேன்கொண்ட சுவைகொண்ட தேமதுர குரல்கொண்ட
நான்கண்ட நங்கையவள் நெஞ்சினிக்கப் பேசிடுவாள்
பூமலரும் பாவைமுகம் பார்த்துவிட்டால் இதயத்தில்
பாமலரும் பருவமகள் பார்வைகளாள் பூமியிலே
தேன்மலரும் கான்மலரும் ஏன்மலரும் ஊன்சிவந்த
வான்மலராய் வந்தவள்என் மடிசாய்ந்து சிரித்திருக்க
பேரழகு கொண்டவளை பக்கத்தில் கொண்டவரை
நூறுநூறு பாடல்கள் நொடிகளிலே பாடியவன்
சோகத்தில் வாடுகிறேன் சொல்லேதும் சொல்லாமல்
ஏகத்தில் எனைவிட்டு எங்குசென்றாள் என்பைங்கிளி
தங்கமகன் எனையிங்குத் தனிமையிலே தவிக்கவிட்டு
சிங்காரச் சீரழகி சுகம்இழந்து போனாளோ
ஊர்விட்டுப் போனாளோ தவிக்கின்றேன் எனக்கிங்கு
யார்வந்துச் சொல்வார்கள் என்னவளின் நிலையெதுவோ?
நாளிரண்டு ஆகியதே நங்கையவள் முகம்கண்டு
வாளிரண்டு பட்டதுபோல் வலிக்கின்ற(து) என்நெஞ்சம்
தோளிரண்டும் நான்சாயத் தானென்றுச் சொன்னாளே
நாளெல்லாம் என்நெஞ்சை நோகவிட்டுச் சென்றாளே
அடடா...
ஏன்வருந்த வேண்டும்நான் எனைமறக்க வில்லையவள்
ஏன்புலம்பு கின்றேன்எனில் என்னருகில் இல்லையவள்
ஒருபோதும் என்நினைவை மறந்தவளும் இல்லையவள்
விரைந்தேதான் வருவாளே நான்பாடும் தேவியவள்.
- இராஜகுரு
Sunday, August 31, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நல்ல சந்த ஓட்டம் வாழ்த்துகள்
இக்கவிதைக்குப்பின்னால் ஒரு ஏக்கம் .. நன்றாக இருந்தது .. கண்டிப்பாக வருவாள் ... காத்திருந்தால்.. :)
நன்றி PICASSA.
நீங்களும் வலைப்பதிவு வைதுள்ளீர்கள?
Post a Comment