(கனவு...)
நித்திரையில் காணாக் கனவாக - எந்தச்
சித்திரமும் காட்டா அழகாக - எனைச்
சுற்றி வரும் வண்ண நிழலாக
பெண்ணொருத்தி உள்ளத்தை கொஞ்சிவிளையாடுகின்றாள்
மண்ணுலகில் எங்கோ இருப்பவளா? - என்
உள்ளத்தில் மட்டும் வசிப்பவளா? என்
எண்ணத்தைக் கெடுக்க வந்தவளா?
தெரியாமல் இவளை நான் திக்கெட்டும் தேடுகின்றேன்
உள்ளத்தின் வண்ணக் கனவுகளில் - என்
நெஞ்சத்தைக் கொஞ்சும் நினைவுகளில் - என்
சிந்தைக்குள் தோன்றும் கவிதைகளில்
காதலியாய்க் கொண்டிவளைக் கற்பனையில் வாழ்கின்றேன்
வெண்ணிலவின் வெள்ளி மண்ணெடுத்துப் - பொன்
வண்டுகள் சேர்த்தத் தேன்தெளித்து - வந்தப்
பூவனத்தின் வண்ணப் பூவெடுத்துக்
கோதையிவள் காதருகில் சூடிதினம் ரசிக்கின்றேன்
வான்சிவக்கும் அந்தி வேளையிலே - தென்றல்
பூவிரிக்கும் வண்ணச் சோலையிலே - அன்பு
கொண்டவளின் மடி மீதினிலே
தலைசாய்த்து நானுறங்க தலைகோது வாள்கோதை
(நனவு...)
நித்திலமாய் - ஒரு
சித்திரமாய் - ஒளி
முத்திரையாய்- உயர்
ரத்தினமாய்
பெண்ணினத்தின் - பேர்
அழகியென - இப்
பூவுலகின் - பூந்
தேவியென
முப்பொழுதும் - ஏன்
எப்பொழுதும் - ஒரு
சொப்பனமாய் - உள்
நிற்பவளை
கண்ணெதிரே - நான்
கண்டேனே - அவள்
பேரழகை - இனிப்
பாடுகிறேன்
(அழகு...)
சுந்தரத் தெலுங்கவள் தாய்மொழி யாம்தினம்
செந்தமிழ் பேசிச் சிரித்திடு வாள்அவள்
மந்திர விழியால் சிந்தும் பார்வைச்
சிந்தையைக் கெடுக்கும்; கனவிலும் அவள்முகம்
வந்தெனை மயக்கும்; காற்றில் பட்டக்
கந்தக மாய்என் நெஞ்சம் எரியும்
மந்திர விழிகளைக் கண்டுவிட்டால்; அவளோ
சந்தனப் பூமண நந்தவன மாய்என்
அந்தரங்க ஆசையில் நிறைந்து விட்டாள்
அந்திநேரக் கனவுகளில் கலந்து விட்டாள்
துள்ளிவரும் காலழகைக் கையிரண்டில் ஏந்திதினம்
அள்ளிவிளை யாடியொரு காவியம் - கள்ளியவள்
பொன்சிரிப்பைப் பார்த்துதினம் நான்படிக்கக் கூப்பிடுமே
மன்மதன் தன்பூ வனம்
பின்னிவைத்தக் கூந்தலிலே சேராமல்
சிரித்திருக்கும் சிறுமுடிகள்
கன்னியவள் காதருகில் மின்னுவது
தானென்றும் பேரழகு
பொன்சிரிப்புப் பூவிதழில் செம்பருத்திப்
பூஞ்சிவப்புக் கண்டவுடன்
என்நெஞ்சின் தாழ்திறக்கும்; கன்னியவள்
அருகினிலே தானழைக்கும்
நடனங்களின் அழகு குறைந்து விடவே
நடப்பாள் அவளும் பூமியின் மேலே
நடையின் அழகைக் காண்பதற்கென்றே
தொடர்ந்தேன் அவளை தினமும் பின்னே
ஒளியலைகள் பாராத அண்டத்தின்
வெளியினிலே சூழ்ந்த இருளெடுத்து
வெண்ணிலவின் வெள்ளொளியில் தொட்டெடுத்து
மின்னுகிற பேரழகாய்க் கார்குழலை
என்னதவம் செய்திறைவன் செய்தானோ
என்னவளின் எழில்கூடத் தந்தானோ
(தெளிவு...)
காத்திருந்து காத்திருந்து கன்னிமகள் வருவதைப்
பார்த்துவிட்டால் ஏனோ படபடக்கும் நெஞ்சமெலாம் - தினம்
பூத்திருக்கும் செந்நிறத்துப் பூவையெல்லாம் தேனிலிட்டுச்
சேர்த்தெடுத்த அழகதனைக் கன்னமெனக் கொண்டவளாம் - அவள்
நேத்திரத்தின் அசைவுகளில் நெஞ்சும் அசைந்தாடும்
பார்த்திருந்தால் வேறுதிசை பார்க்கவும் மறந்துவிடும்
முப்போதும் அவளழகில் மயங்கிநின்ற மன்னனிவன்
இப்படியே அவளழகை இடைவிடாது பாடிடலாம் - ஆனால்
வனப்பாலே மட்டுந்தான் பேரழகி அன்னவள்
குணத்தாலே எப்படியோ கண்டதில்லை ஒருபோதும்
கனவுநங்கைப் போலிருந்தாள் கனவுகளில் வலம்வந்தாள்
நினைவினிலும் சிலகாலம் நின்றிருந்தாள் கோதைமகள் - நானும்
இளமை கொண்டாடும் அவளழகில் மயங்கியே
சபலம் கொண்டேன் சலனம் கொண்டேன்
இனியும் அவளை நினைத்திருந் தால்என்
மனதில் அமைதி மறைந்து போகும்
பாதியில் வந்தவள் பாதியில் போனாள் - இனி
ஆதியில் எனக்கெனப் பிறந்தவள் எவளோ
அவள்வரும் நாள்வரைக் காத்திருக்கும் இதயம்
அவள்வந்த பின்னால் நாளும் பூத்திருக்கும்
- இராஜகுரு
Sunday, August 31, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
மிகச் சிறப்பாயிருக்கிறது இக்கவிதை. வாழ்த்துகள்
Really ur lines are superb.i m proud of my student ie you
மறுமொழி இட்டமைக்கு மிக்க நன்றிகள்.
Post a Comment